மதுராந்தகம் அருகே அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் பட்டதாரி இளைஞர்
அத்திப்பழ சாகுபடியில் அசத்தும் விமல்ராஜ்.
தோட்டக்கலைத்துறையில் பட்டபடிப்பினை படித்துள்ள விமல்ராஜ் என்ற அந்த இளைஞர் சென்னையில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து விலகி இப்போது விவசாயத்தை கையில் எடுத்துள்ளார். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அத்திப்பழம் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைவான வருமானமும், நிம்மதியும் அடைந்து வருவதாக கூறுகிறார் இளம் பட்டதாரி விவசாயி விமல்ராஜ்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் தோட்டக்கலைத்துறையில் பட்டபடிப்பு படித்திருக்கிறேன். சென்னையில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். பிறகு எனது உறவினர் நிறுவனத்தில் பணியாற்றினேன். இங்கெல்லாம் கிடைக்காத ஒரு மன நிம்மதி விவசாயத்தில் தற்போது கிடைக்கிறது.
எனக்கு தற்போது 30 வயதாகிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை நான் சுற்றி வந்துவிட்டேன். அப்படி சென்ற மஹாராஷ்டிராவில் அத்திப்பழம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. தற்போது தமிழகத்தில், விவசாயத்திற்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறைந்த ஆட்களுடன் செய்யக்கூடிய விவசாயம் அத்தி விவசாயம் என தெரியவந்தது.
சரி நாமும் அத்திப்பழம் சாகுபடி செய்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், கீழ்அத்திவாக்கம் கிராமத்தில் எங்கள் நிலத்திலேயே "தமிழன்" அத்தி தோட்டம் என்ற பண்ணையை உறுவாக்கி, அத்திப்பழம் சாகுபடி செய்ய திட்டமிட்டேன். இதற்காக முதற்கட்டமாக 400 அத்திப்பழக் கன்றுகளை வாங்கினேன். ஒரு கன்றின் விலை ரூ.160. அதனை வாகனம் மூலம் செங்கல்பட்டு கொண்டு வந்ததற்கான செலவு தனி.
அத்திப்பழக் கன்று நடவு செய்து சுமார் 6 மாதங்களில் காப்பு பிடித்தது. அதிலிருந்து 8 மாதங்கள் வரை அத்திப்பழம் அறுவடைக்கு வரும். நடவு செய்து ஒரு வருடம் தான் ஆகிறது. இதுவரை ஒரு டன் வரை மகசூல் பெற்றிருக்கிறேன். பண்ணையில் இருந்தே இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்கிறேன்.
ரசாயனங்கள் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரம் மூலம் மட்டுமே இதை பராமரித்து வருகிறேன். அதனால் அத்திப்பழம் கிலோ ஒன்று ரூ.220-க்கு விற்பனை செய்கிறேன். இதனை மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
5 டிகிரியில் இருந்து 45 டிகிரி வரையிலான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் தாராளமாக அத்திப்பழம் சாகுபடி செய்யலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விடுகிறேன். முதற்கட்டமாக நான் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தநிலையில், அதற்கு நல்ல வரவேற்பும், மகசூலும் கிடைப்பதால் மேற்கொண்டு வேறு நிலங்களிலும் இதனை பயிரிட திட்டமிட்டு வருகிறோம். முழு ஈடுபாட்டோடு இதில் இறங்கினால் நல்ல லாபம் கிடைப்பது உறுதி. இதை எனது அனுபவத்தில் கூறுகிறேன் என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார் விமல்ராஜ்.
மேலும், தமிழகத்தில் உள்ள இளைய தலைமுறை விவசாயிகளுக்கு இந்த அத்தி வளர்ப்பு விவசாயம் நல்ல பலனை கொடுக்கும். அத்தி கன்றுகள் எங்களது தோட்டத்திலேயே உற்பத்தி செய்து வருகிறோம். தேவைப்பட்டால் தமிழன் அத்திபழ தோட்டக்கலை பண்ணையை அனுகலாம் ஒரு அத்தி கன்றின் விலை ரூ,55 மட்டுமே என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu