இளைஞர் கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் புழுதிவாக்கம் டாஸ்மாக் மதுக்கடை அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (24). எலக்ட்ரீஷியனாக தொழில் நடத்தி வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேடந்தாங்கல் அருகே உள்ள புழுதிவாக்கம் டாஸ்மாக் கடைக்கு அருகே மது அருந்தச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு அவருக்கும் மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் வினோத் அங்கேயே பலத்தகாயங்களுடன் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் படாளம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர்கள் உட்பட 9 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புழுதிவாக்கம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu