மனித நேயம் மரித்து விட்டதா?. செங்கல்பட்டு அருகே விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 குரங்குகள்

மனித நேயம் மரித்து விட்டதா?. செங்கல்பட்டு அருகே விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 குரங்குகள்
X

விஷம் வைத்து கொல்லப்பட்ட குரங்குகள்

செங்கல்பட்டு அருகே பாலாற்று படுகையில் ஏழு குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே மர்மநபர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் எட்டு குரங்குகளுக்கு விஷம் கொடுத்து பாலாற்று படுகையில் வீசியுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாலாற்று படுகையில் இறந்துகிடந்த நான்கு பெண் குரங்குகள் மற்றும், மூன்று ஆண் குரங்குகள் என 7 குரங்குகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு குரங்கை மீட்டு வனத்துறையினர் கால்நடை துறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:- பாலாற்றுப் படுகையை சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் யாரேனும் அப்பகுதிகளில் விஷம் வைத்து கொன்று பாலாற்றுப் படுகையில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் வன விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும், குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி