மதுராந்தகம் ஏரி திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுராந்தகம் ஏரி
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியில் இருந்து 27,300 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அவசரகால ஷட்டர்களிலிருந்து 2300 கன அடி நீர் திறப்பு காரணமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியிலிருந்து தற்போது 25.2 அடியாக எட்டிள்ளதால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.
மேலும் ஏரிக்கு நீர் வரத்து தற்போது அதிகமாக உள்ளதால் அவசர கால ஷட்டர்களிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று நேற்று மாலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரி நீராக கலுங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டு இன்று காலை அவசர கால ஷட்டர்களை பொதுப்பணித்துறையினர் திறந்தனர். இதன் காரணமாக ஏரியிலிருந்து தற்போது, 29 ஆயிரத்து 500 கன அடியாக உபரி நீரானது சீறி பாய்ந்தோடுகிறது
இதனால் மதுராந்தகம் ஏரியைச் சுற்றியுள்ள கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu