பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு; பொதுமக்கள் சரமாரி புகார்

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வீடு.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டது இல்லீடு ஊராட்சி. இங்கு பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், இல்லீடு ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலணி, சின்ன காலணி, ஊர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 180 வீடுகள் ஒதுக்கப்பட்டு வீடுகட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதியை பயணாளிகளின் வங்கிகணக்கில் நான்கு தவணைகளாக வழங்குகின்றனர். பின்னர் பயணாளியின் வீட்டை சேர்ந்த இருவரது பெயரில் மகாத்மாகாந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்தது போன்றும், இதேபோல் மற்ற 4லிருந்து 6பேர் வரை வீடுகட்டும் திட்டத்தில் வேலை செய்தது போன்று அவரவர் வங்கிகணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இதில் அனைவரது வங்கிகணக்கில் வரவுவைக்கப்படும் பணத்தை எடுத்து கொடுக்கும்படி தானியங்கி மிஷினில் கைரேகை வாங்கிச் சென்று பணத்தை எடுத்துக்கொள்கின்றனர்.ஆனாலும் 4ஆண்டுகளாக இதுவரை வீடுகள் சரிவர முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.
இதன் காரணமாக இருந்த வீட்டையும் இழந்து தற்போது சாலையிலும் பள்ளிக்கூடங்களிலும் வாழ்க்கையை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக பயனாளிகள் கூறுகின்றனர். மேலும், வெறும் 6 சிமெண்ட் மூட்டையில் பேஸ்மட்டமும், 10 சிமெண்ட் மூட்டையில் சீலிங்போட்டுள்ளனர்.
சில வீடுகளில் கழிப்பிடம் கட்டப்படாமல் பள்ளம்தோண்டி அதன்மீது மூடிபோட்டுவிட்டு கழிப்பிடம் கட்டிமுடித்தது போன்று அமைத்துவிட்டனர். தற்போது பெய்த சாதாரண மழைக்கே மேல் பகுதியிலிருந்து மழைநீர் ஊற்றுகிறது. கனமழை பெய்தால் என்னகதியென்று தெரியாது. தற்போது கட்டப்பட்டுள்ள வீடு தரமாக கட்டப்படாததால் இன்னும் 5ஆண்டுக்குக்கூட தாங்காது. அதுமட்டுமல்லாமல் வீட்டின் உட்பகுதியில் பூசுவேலை செய்யாமலும், தரை அமைக்காமலும் கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் நாங்கள் புதியவீட்டில் குடியிருக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் எழுதபடிக்க தெரியாத காரணத்தை வைத்து எங்களை ஏமாற்றிவிட்டனர். இதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. ஒருவருக்கு வந்த வீட்டை மற்றொருவருக்கு கொடுத்து அதிகாரிகள் பணம் பெற்றுக்கொள்கின்றனர். 4 வருட காலமாக கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வீட்டுக்கு போதிய நிதியை வழங்க 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் கையூட்டு கேட்பதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் தலயயிட்டு நேரில் வந்து ஒவ்வொரு வீடுகளையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu