கல்குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் சாலை மறியல்
மதுராந்தகம் அருகே தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநல்லூர் கிராமத்தில் சுமார் 180 ஏக்கரில் - தனியார் கல்குவாரி அமைந்துள்ளது.இந்த தனியார் கல்குவாரியால் சிறுநல்லூர், நேத்தப்பாக்கம், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மதுராந்தகம் சித்தாமூர் சாலையில் கல்குவாரிக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்தக் கல் கல்குவாரியில் 100 அடி ஆழம் வரை அனுமதி பெற்று 500 அடிக்கு மேல் ஆழம் அமைத்து கல்வெட்டி எடுப்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் ஆதாரம் குறைந்துள்ளதாகவும் சுற்றியுள்ள பகுதிகளில் மேய்க்கால் புறம்போக்கு இடங்கள் இருப்பதனால் அப்பகுதியில் படியும் கல் துகள்களால் ஆடு மாடுகள் மேய்க்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் இந்த கல்குவாரியில் வெடிக்கப்படும் வெடி அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் கால்நடை, விவசாயம் போன்ற வாழ்வாதாரம் அழிந்து வருவதாக் கூறப்படுகிறது.
இந்த கல்குவாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் காவல்துறையினர், இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu