வண்டலூர் பூங்காவில் மீண்டும் சிங்கம் சஃபாரி
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021-2022 ம் ஆண்டில் வண்டலூர் பூங்காவில் வனப்பகுதியில் திறந்த வெளியில் விடப்பட்டு உள்ள சிங்கங்களை அதன் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று பார்க்கும் சிங்கம் சஃபாரி நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர் நோய் தொற்று குறைந்ததும் பூங்காவில் மூடப்பட்டு இருந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், இரவு நேர விலங்குகள் என ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் சிங்கம் சஃபாரி மட்டும் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சஃபாரி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இதனை சோதனை முறையில் தொடங்க பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இந்த ஆண்டு விலங்குகள் பரிமாற்றத்தில் 2 சிங்கங்கள் வந்து உள்ளன. வண்டலூர் பூங்காவில் தற்போது மொத்தம் 10 சிங்கங்கள் உள்ளன. இவற்றில் 3 சிங்கங்ளங்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றுக்கு முறையான பயிற்சி, மற்றும் உணவு கொடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கங்களின் இருப்பிடத்திற்கு வாகனங்கள் செல்லும்போது பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கான வாகனங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் சிங்கம் சஃபாரி பயன் பாட்டுக்கு வரும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu