கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: அமைச்சர்!

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: அமைச்சர்!
X
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.(கோப்பு படம்)
நள்ளிரவில் பேருந்துவசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் முடிச்சூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு பேருந்துகளை நிறுத்தும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

இதனை இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதே போல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, மண்ணிவாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 300 பேர் தங்கும் இடம், உணவகம், கழிப்பிட வசதியுடன் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமான பணி நடக்கிறது. மேலும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பணியில் தாமதம் ஆனது. ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பேருந்துநிலையம் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பேருந்துநிலையத்தில் பயணிகளின் தேவைக்கு ஏற்பட கூடுதல் வசதிகள் செய்யப்படும் என்று கூறினார்.

அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படவில்லை என்று சிலர் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய், வதந்தி பரப்புகிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயங்கிய 100 சதவீத பேருந்துகளில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீதம் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று நள்ளிரவு பயணிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் எப்போதுமே குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்ட போதும் இரவு 11.30 மணிக்கு மேல் எப்போதும் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படும்.

நள்ளிரவு நீண்ட தூரம் செல்லும் பயணிகள் பாதுகாப்புக்காக பேருந்து பயணம் செல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் 200 பேர் திடீரென நள்ளிரவில் பேருந்துவசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது.

ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று உள்ளனர். கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக கூறி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!