அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளம் கரைபுரண்டோடும் அடையாறு
வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகிறது.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை நிலவரப்படி 1650 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது. மேலும் படப்பை அருகில் உள்ள மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேறி அதுவும் அடையாறு ஆற்றில் கலக்கிறது.
இதேபோல் சுற்றி உள்ள ஆதனூர் ஏரி, சிக்கனா ஏரி, பெருங்களத்தூர் ஏரி, இரும்புலியூர் உள்ளிட்ட சிறிய ஏரிகளும் நிரம்பி அதில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றப்புற பகுதியில் பெய்யும் மழைநீர் பாப்பன்கால்வாய் வழியாக பெருக்கெடுத்து அடையாறு ஆற்றுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக அடையாறு ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இருகரைகளையும் தொட்டபடி பரந்து விரிந்து செல்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் மழைநீர் மற்றும் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் கலப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் காரணமாக அதிகனமழை பெய்யும்போது சுற்றி உள்ள சிறிய ஏரிகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வரும்போது அடையாறு ஆற்றில் மேலும் கூடுதலாக வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக அடையார் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் முதலில் பாதிக்கப்படுவது மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பழைய பெருங்களத்தூர், அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகள் தான். ஆனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் தற்போது வரை இந்த பகுதிகளில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
சமீபத்தில் அடையாறு ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி முழு கொள்ளளவில் கரைபுரண்டு வெள்ளம் சென்றாலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu