வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் 12 ஆண்டுக்கு பிறகு வெளியே வந்த சங்கு! பக்தர்கள் பரவசம்
சங்கு குளத்தில் இருந்து தோன்றிய புதிய சங்கு
திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது. மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்த்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சங்கு பிறந்து கொண்டிருப்பதால், சங்கு தீர்த்தம் எனப் பெயர்பெற்றது.
வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். இக்குளக்கரையில் வண்டு(சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
ஆதியில் மார்க்கண்டேயன் இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்கப் பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.
இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.
இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரையில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu