கல்பாக்கம் அருகே சிறுமி கொலையை கண்டித்து, மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கல்பாக்கத்தில் சிறுமி கொலையை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தில், கூலி தொழிலாளியின் 11 வயது மகள் கடந்த 1ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில், முட்புதரில் போலீஸாரால் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், மேற்கண்ட கொலை சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை வெங்கம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, சம்பவம் தொடர்பான குற்றப் பத்திரிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்,
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்றும் வெங்கம்பாக்கம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்,
அப்பகுதியில் கட்டுப்பாடு இல்லாமல் விற்பனையாகும் கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, மாநில சட்ட உதவிமைய செயலாளர் மனோன்மணி, மாவட்ட செயலாளர் கலையரசி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu