சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு
சிவசங்கர் பாபா (பைல் படம்)
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாகி டெல்லியில் பிடிபட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்கிற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாராணை முடிவடைந்த நிலையில்,
சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் பெண்களிடம் குற்றம் செய்யும் நோக்குடன் தாக்குதல், பலப்பிரயோகம் செய்தல், ஆட் கடத்தல், ரகசியமாக அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்துவது, கட்டாயப்படுத்தி திருமண உறவு கொள்வதற்காகக் கடத்துவது, பெண் வன்கொடுமைச் சட்டம், குழந்தைகளிடம் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் உத்தரவுப்படி அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில், நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இம்மனு மீதான விசாரணை நடத்துவதற்காக இன்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தற்போது ஆஜர் படுத்தினர்.
அப்போது, சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், சிவசங்கர் பாபாவுக்கு உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ள காரணமாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் வாதாடியதாக கூறப்படுகிறது.
பின்னர் இதன் மீதான விசாரணையை மாலை நீதிபதி ஒத்திவைத்தார்.இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் சிபிசிஐடி போலிசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu