2015ஐ போல் சென்னைக்கு ஆபத்தா? வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

2015ஐ போல் சென்னைக்கு ஆபத்தா? வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
X

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும்னிலையில், செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. 2015இல் ஏற்பட்டது போல், சென்னை மீண்டும் ஆபத்து நேரிடாமல் இருக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களை உலுக்கி எடுத்த மழை, தற்போது வட மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி, மொத்தம் 24 அடி என்ற நிலையில், தற்போது நீர்மட்டம் 21.30 அடியை தொட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், எந்த நேரமும் முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே, உபரிநீரை திறந்து விடுவது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இன்று காலை 10 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு, இது குறித்து முடிவெடுக்க உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்தது போல், சென்னைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமா என்ற கவலையும் சென்னை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின்போது, சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை யாரும் மறந்துவிட முடியாது.

அப்போது, கனமழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. படகுகளில் தெருங்களில் சென்று மக்களை மீட்டு வந்த காட்சிகளை இன்னமும் மறக்க முடியாது. இதற்கு பல காரணங்களை சொன்னாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!