அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 900 பேர் மீது குற்றப்பத்திரிகை
அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 ம்தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார். குற்றவாளியாக சேர்க்கப்பட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தங்களை தேவையின்றி வழக்கில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி கூடுதல் குற்றபத்திரிகையில் சுமார் 900 பேர் வரை சேர்த்துள்ளதால் அனைவருக்கும் விசாரணை அனுமதி கிடைத்தவுடன் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்க முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
ஜூன் மாதம் 14ம்தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டநாளில் இருந்து செந்தில் பாலாஜி சிறை, மருத்துவமனை என போலீஸ் காவலில் தான் உள்ளார். அவர் அமைச்சராக நீடித்தாலும் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu