ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது இனி ஈஸி.. குடும்பத் தலைவரின் ஒப்புதலே போதும்

ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது இனி ஈஸி.. குடும்பத் தலைவரின் ஒப்புதலே போதும்
X
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய குடும்பத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் போதும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு, குடியிருப்பவர்கள் இணைய வழியாக ஆதாரில் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு எந்தவொரு கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு (குழந்தைகள், கணவன்/ மனைவி, பெற்றோர்) இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்பத் தலைவரின் ஒப்புதலுடன் ஆன்லைனில் ஆதார் கார்டில் உள்ள முகவரியை புதுப்பிக்க உதவுவதற்கான புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கொண்டு வந்துள்ளது. ஆதாரில் கொண்டு வந்துள்ள இந்த அம்சம் வாடகை வீட்டுத்தாரர்கள் மற்றும் திருமணமாகி வேறு வீட்டுக்கு செல்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரருக்கும், குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு, அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாதபட்சத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்பத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுய சான்றிதழைப் பயன்படுத்தலாம்.

தற்போது நிலுவையில் உள்ள இருப்பிடச் சான்று ஆவண வசதியுடன், இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராகக் கருதப்படுவதோடு, தமது முகவரியை உறவினர்களுடன் இதற்காக பகிர்ந்து கொள்ளலாம்.

இணைய வழியாக முகவரியை மாற்றும் வேளையில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற தளத்தில் இந்த தேர்வை ஒருவர் பயன்படுத்தலாம். அதன் பிறகு, குடும்பத் தலைவரின் ஆதார எண்ணை சரிபார்த்தல் நடைமுறைக்காக பதிவு செய்ய வேண்டும். பின்பு, உறவுமுறை ஆவணச் சான்றை குடியிருப்போர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ. 50 செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குடும்பத் தலைவருக்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். அறிவிக்கை கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்பத் தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ, அல்லது தமது முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தப்படும். இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இது போன்ற சூழ்நிலையில் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

ஆதார் கார்டில் முகவரியை மாற்றுவது எப்படி?

ஸ்டெப் 1: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

ஸ்டெப் 2: ஆன்லைனில் முகவரியை புதுப்பிப்பதற்கான புதிய விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவேண்டும்.

ஸ்டெப் 4: குடும்பத் தலைவரின் ஆதார் எண் சரிபார்ப்புக்குப்பின், நீங்கள் அவர்களுடன் ஆன உறவுச் சான்று ஆவணத்தை பதிவேற்ற வேண்டும்.

ஸ்டெப் 5: கட்டணமாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஸ்டெப் 6: கட்டணம் செலுத்தியபின், சேவை கோரிக்கை எண் பகிரப்படும். இதனை்தொடர்ந்து முகவரி மாற்றம் கோரிக்கை குறித்து குடும்பத் தலைவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

ஸ்டெப் 7: இந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் குடும்பத் தலைவர் முகவரி மாற்ற கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். இதையடுத்து உங்கள் முகவரி மாற்றம் கோரிக்கை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!