சந்திரயான் -3 திட்டத்தில் முன்னாள் மாணவர்கள்: கவுரவித்த சென்னை ஐஐடி

சந்திரயான் -3 திட்டத்தில் முன்னாள் மாணவர்கள்: கவுரவித்த சென்னை ஐஐடி
X
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் -3 திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்பட்ட முன்னாள் மாணவர்களை சென்னை ஐ.ஐ.டி கௌரவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் -3 திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் பன்னிரண்டு பேரை சென்னை ஐ.ஐ.டி கௌரவித்தது.

இஸ்ரோவின் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், வளாகத்தில் நடைபெற்ற 'ஓவர் தி மூன் வித் சந்திரயான் -3' என்ற நிகழ்ச்சியின் போது சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

2011-ஆம் ஆண்டில் பி.எச்.டி பட்டம் பெற்ற இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (வி.எஸ்.எஸ்.சி) இயக்குநர் டாக்டர் எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் 2016 ஆம் ஆண்டில் இயந்திர பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல் (பி.எச்.டி / எம்.இ) ஆகியோர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தற்போது சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பிஎச்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினரான இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (வி.எஸ்.எஸ்.சி) இயக்குநர் டாக்டர் எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர் பேசுகையில், "இந்த மாதம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ககன்யான் விண்கலத்தின் முதல் பெரிய திட்டத்தை நாங்கள் நடத்த உள்ளோம். மனிதர்களை அனுப்பும் பணிகளில், குழுவினரின் பாதுகாப்பு முக்கியம். இந்த ககன்யான் பணியை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். எதிர்காலத்தில் பல அற்புதமான திட்டங்கள் உள்ளன" என்றார்.

சென்னை ஐஐடியில் பி.எச்.டி மாணவராக இருந்த நாட்களை நினைவு கூர்ந்த டாக்டர் எஸ்.உன்னிகிருஷ்ணன் நாயர், "நான் இந்த வளாகத்தில் ஒரு செமஸ்டர் மட்டுமே தங்கியிருந்தேன். ஆனால் அந்த ஒரு செமஸ்டர் என்னுள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. பிஎச்.டி.க்கான எனது குரு பேராசிரியர் பி.சந்திரமௌலி இப்போது துறையின் தலைவராக இருக்கிறார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என்றார்.

சந்திரயான்-3 குறித்து சிறப்புரையாற்றிய இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் டாக்டர் பி. வீரமுத்துவேல், “இது அறிவியல் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் சாதனையாகவும் மாறியுள்ளது. இதில் வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. லேண்டர் எந்தப் பாதையில் சென்றாலும் அது தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். அதுதான் இந்த முறை எங்களின் வியூகம். எங்கள் அனைத்து குழுக்களும், குறிப்பாக, வழிசெலுத்தல், வழிகாட்டுதல், கட்டுப்பாடு, உந்துவிசை அமைப்புகள், சென்சார்கள் மற்றும் அனைத்து அம்சங்களிலும், ஒற்றுமையுடன் செயல்பட்டன. நூற்றுக்கணக்கான ஆய்வக சோதனைகள் மற்றும் மூன்று முக்கியமான கள சோதனைகளிலிருந்து இந்த நம்பிக்கை உருவானது" என்று கூறினார்.

சந்திரயான் -3 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பிற இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் (சென்னை ஐ.ஐ.டி.முன்னாள் மாணவர்கள்) நிகழ்வின் போது தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் விவரம்:

1. டாக்டர் பி.அருண் குமார் (1999 / எம்.டெக் / எம்.இ), துணை இயக்குநர், எர்த் ஸ்டோரபிள் இன்ஜின்கள் & ஸ்டேஜஸ் (ஈ.எஸ்.இ.எஸ்)

2. முனைவர் ஜோன் தரகன் (1987/ எம்.டெக்/ எம்.இ, 2001/பிஹச்டி/ எஎம்பிஇ), திரவ உந்துவிசை அமைப்புகள் மையம்

3. திரு அப்துல் ஹமீது, (2004 / எம்.டெக் / எம்.இ) விஞ்ஞானி / பொறியாளர், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம் (யு.ஆர்.எஸ்.சி)

4. திரு ராஜீவ் சேனன் சி. (2005 / எம்.டெக்/ எம்.இ, / எம்இ), பிரிவுத் தலைவர், மோனோபுரோப்பலண்ட் சிஸ்டம்ஸ் & கூறுகள் பிரிவு, எல்.பி.எஸ்.சி.

5. டாக்டர் ஷாம்ராவ் (2009 / எம்.டெக்/ எம்.இ, 2020/எம்.இ), விஞ்ஞானி, யு.ஆர்.எஸ்.சி

6. திரு எச்.எம். ராகவேந்திர பிரசாத் (2012 / எம்.டெக்/ / எம்.இ), விஞ்ஞானி / பொறியாளர், மெக்கானிசம் அசெம்பிளி பிரிவு, விண்கல வழிமுறைகள் குழு, யு.ஆர்.எஸ்.சி.

7. திரு மாதவராஜ், விஞ்ஞானி (2012 / எம்.டெக்/ ஏஇ), யுஆர்எஸ்சி

8. ஆர்.கார்த்திக் (2019 / எம்.எஸ், பி.எச்.டி / இ.இ), விஞ்ஞானி, எல்.பி.எஸ்.சி

9. திரு பி.எஸ்.ஃபனி தினகர் (2017 / எம்.டெக்/ எம்.இ,) விஞ்ஞானி, யு.ஆர்.எஸ்.சி

10. திரு சக்திவேல் எம். (2017 / எம்.டெக்/ எம்.இ), விஞ்ஞானி / பொறியியலாளர், பொறியியல் முறை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, விண்கல பொறியியல் முறைகள் குழு, யு.ஆர்.எஸ்.சி.

முன்னதாக பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, “கணினி அறிவியல் மட்டுமே முக்கியம் என்று கருதப்பட்ட காலம் போய்விட்டது. பொறியியலின் ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது பி.டெக் மற்றும் பொறியியல் படிக்க விரும்பும் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்கு சொல்லப்படும் தெளிவான செய்தி. சந்திரயான்-3 நமது காலத்தின் சிறந்த எடுத்துக்காட்டு. எந்திரவியல், விண்வெளி, வேதியியல் பொறியாளர்கள் ஒரே திட்டத்தில் இணைந்து வெற்றியை உருவாக்கியுள்ளதை நீங்கள் இங்கே காணலாம்” என்று கூறினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, ஸ்டெம் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்த சென்னை ஐ.ஐ.டி விரும்புகிறது. அதற்கான ஒரு நடவடிக்கைதான் இந்தப் பாராட்டு விழா. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் உரையைக் கேட்க பல பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை சென்னை ஐ.ஐ.டி. அழைத்தது.

முன்னாள் மாணவர்களை வரவேற்று, சென்னை ஐ.ஐ.டியின் பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா பேசுகையில், "இஸ்ரோவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான சென்னை ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்கள், உலக அளவில் 80-க்கும் அதிகமான நாடுகளின் உள்ள சுமார் 55,000 முன்னாள் மாணவர்கள் ஆகியோர் தங்கள் துறைகளில் சிறந்து விளங்குவதில் சென்னை ஐ.ஐ.டி பெருமிதம் கொள்கிறது. ஆனால் இந்தப் பன்னிரண்டு பேர் கொண்ட குழு உலகில் வேறு எந்த நாடும் செய்யாத ஒன்றை செய்து நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது” என்று கூறினார்.

சென்னை ஐ.ஐ.டியின் நிறுவன மேம்பாட்டு அலுவலக தலைமை செயல் அதிகாரி கவிராஜ் நாயர் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!