எதிர்காலத்தில் பல பெருந்தொற்றுக்கு வாய்ப்பு: டாக்டர் சௌமியா சுவாமிநாதன்

சென்னை தரமணி சிஎஸ்ஐஆர் வளாகத்தில் இன்று நடைபெற்ற அறிவியல் தினவிழாவில் பேசிய டாக்டர் சவுமியா சாமிநாதன்.
சிஎஸ்ஐஆர் கீழ் இயங்கும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் தேசிய அறிவியல் தினம் சென்னை தரமணி சிஎஸ்ஐஆர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பெருந்தொற்றில் இருந்து அறிவியலுக்கான பாடம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது, சர் சி.வி. ராமன் ஒரு எளிமையான நபர் மற்றும் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார் என்று கூறினார்.
மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது உலக சுகாதார நிறுவனத்தின் பங்கினை குறித்து பேசினார். மேலும், மனிதர்கள் - விலங்குகள் இடையே வளர்ந்து வரும் தொடர்புகளை சுட்டிக்காட்டிய அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிக்கப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் புதிய தொற்றுகள் உருவாகும் என்றும் அவற்றை சமாளிப்பது சவாலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சூழலில் சுய சார்பு என்பது முக்கியமானது எனவும், இந்தியா தனக்கு தேவையான மருந்துகள் தயாரிப்பில் முக்கிய இடத்தில் இருப்பதாகவும், இதன் மூலம் வருங்காலத்தில் தனது பிரச்சனைகளை எளிதாக இந்தியா கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக காசநோய், எச்ஐவி போன்ற தற்போது உள்ள நோய் தடுப்பு பணிகள் எதிர்கால தொற்று நோய்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றார். மேலும் அறிவியல் ஆராய்ச்சியில் தகவல் பரவல், ஒத்துழைப்பு மற்றும் பகிர்வு ஆகிய இரண்டு அம்சங்களும் கொரோனாவை எதிர்கொள்ள முக்கிய பங்கு வகித்தன என்று தெரிவித்தார்.
முன்னதாக கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் என் ஆனந்தவல்லி வரவேற்புரை நிகழ்த்தினார். மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கே.ஜே. ஸ்ரீராம் நன்றியுரை நிகழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu