கனிமொழிக்கு மத்திய நிலைக்குழு தலைவர் பதவி கொடுத்ததன் பின்னணி தெரியுமா?

MP Kanimozhi | DMK Kanimozhi
X

அமித்ஷா- கனிமொழி

MP Kanimozhi -கனிமொழிக்கு மத்திய அரசின் நிலைக்குழு தலைவர் பதவி கொடுத்ததன் பின்னணி பற்றி அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

MP Kanimozhi -தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வின் மகளிர் அணி மாநில செயலாளராகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் இருப்பவர் கனிமொழி.


இவருக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிலைக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற்றதற்காக கனிமொழி எம்.பி. சென்னையில் இன்று தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார். இதனை கனிமொழி எம்.பி.தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் சமூக வலைத்தளத்திலும் படத்துடன் பதிவிட்டுள்ளார். தி.மு.க.வை பொறுத்தவரை தற்போது 24 மக்களவை உறுப்பினர்களும், ராஜ்யசபா எனப்படும் மேலவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே நிலை குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒருவர் கனிமொழி. இன்னொருவர் திருச்சி சிவா எம். பி. திருச்சி சிவா எம் பி க்கு தொழில்துறை நிலை குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

நிலைக்குழு பதவி ஏன்?

பொதுவாக நிலை குழு தலைவர் பதவி என்பது பெரிய அளவில் அதிகாரங்கள் படைத்த ஒரு அமைப்பு இல்லை என்றாலும் பெரும்பாலும் இது மத்திய அரசில் பதவியில் உள்ள கட்சி எம்.பி.க்களுக்கு மட்டும் இன்றி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வழங்கப்படுவது தான் மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 -22 ஆம் ஆண்டுக்கான நிலை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட போது இதே கனிமொழி எம்.பி.க்கு கெமிக்கல் மற்றும் உரத்துறையில் நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவில் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கனிமொழி எம். பி. யின் கீழ் இந்த நிலைக் குழுவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 எம்.பி.க்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

அமித்ஷா செய்த ஏற்பாடு

கனிமொழி எம்.பி. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார். அவர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்த போது 'சஞ்சத் கிராம் ஆதர்ஷ் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றலாம் என ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் இருந்து முதன் முதலாக கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை தத்தெடுத்து அங்கு சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து கொடுத்தார். கனிமொழி எம்.பி.யின் இந்த பணி அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் காரணமாகவே இப்போது அவருக்கு பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை கவனிப்பது, ஓட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, திட்ட பணிகளை ஆய்வு செய்வது இந்த நிலைக் குழுவின் முக்கியமான நோக்கமாகும். அந்த அடிப்படையில் வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக கனிமொழி செயல் படுத்துவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கனிமொழியை பொறுத்தவரை அவர் தி.மு.க. எம்.பி. என்றாலும் மத்திய அரசுடன் தொடர்ந்து இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார். அவர் தமிழகத்தின் உரிமைகளுக்காக தமிழ் மொழிக்காக பலமுறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் வாதாடி இருக்கிறார். போராடி இருக்கிறார். அவர் உரிமைக்காக குரல் கொடுத்ததை கூட மத்திய அரசு பலமுறை பாராட்டி தான் இருக்கிறது.சமீபத்தில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பெரும் உதவி செய்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.


கனிமொழி தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழியை எதிர்த்து அங்கு பா.ஜ.க. சார்பில் களத்தில் நின்றவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழிசை சௌந்தரராஜனை கணிசமான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வீழ்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின்னர் தமிழிசை சவுந்தரராஜன். தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அவர் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

சுமுகமான அணுகுமுறை

கனிமொழி எம்.பி. யை பொறுத்தவரை திறமையின் அடிப்படையில் அவருக்கு இந்த பதவியை பா.ஜ.க. வழங்கி இருந்தாலும் அவர் மத்திய பா.ஜ.க. அரசுடன் சுமுகமான அணுகுமுறை கடைபிடித்து வருவதாக அரசியல் வல்லுனர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர் மீது தனிக்கவனம் கொண்டுள்ள பா.ஜ.க. அரசு தனது கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசையை வீழ்த்தியவர் என்ற ஒரு வெறுப்புணர்வை கூட காட்டாமல் ஏற்கனவே நிலைக்குழு உறுப்பினர் பதவி, இப்போது தலைவர் பதவி என மேலும் மேலும் அவருக்கு பதவிகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கௌரவிப்பு அவரை பா.ஜ.க. பக்கம் நெருங்க வைக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் உயிருடன் இருந்தவரை டெல்லி அரசியல் முழுவதையும் அவர்தான் கவனித்து வந்தார்.

கருணாநிதியின் மனசாட்சி

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதாவால் நெருக்கடி ஏற்பட்ட போது கொள்கை ரீதியாக சரிப்பட்டு வராது என்ற கருத்துடன் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்த கருணாநிதி தயங்கிய போது முரசொலி மாறன் தான் அதற்கான காரண காரியங்களை விளக்கி கூட்டணியில் அங்கம் வகிக்க கருணாநிதியை சம்மதிக்க வைத்தார். இது தி.மு.க.வின் கடந்த கால டெல்லி அரசியல் கடந்த கால வரலாறு. மாறனுக்கு பின்னர் டெல்லி அரசியலில் அவரது மகன் தயாநிதி மாறன் முக்கிய இடத்தை பிடித்தார்.

கனிமொழி மீது தனி அக்கறை

அதன்பின்னர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் டெல்லி அரசியலில் உரிய அங்கீகாரம் பெறவில்லை. தற்போது அந்த இடத்தை கனிமொழி ஸ்ட்ராங்காக பிடித்துள்ளார். கனிமொழி மீது 2ஜி வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. தவிர வேறு எந்த புகார்களும் இல்லை. அந்த வகையில் கனிமொழி எதிர்காலத்தில் தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருப்பார் என கருதி பா.ஜ.க. தொடர்ந்து அவர் மீது தனி கவனம் செலுத்துவதாகவே அரசியல் வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வருங்காலத்தில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அப்போது அந்த கூட்டணி அச்சாரத்தில் கனிமொழி முக்கிய பங்கேற்பாளராக இருப்பார் என்றே கருதப்படுகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil