முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.. மத்திய கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி...
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த மத்திய கண்காணிப்பு குழுவினர்.
தமிழகத்தில் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் பிரச்னை நிலவி வருகிறது. அணையில் தண்ணீர் தேக்குவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கும் பிரச்னை நிலையில், உச்ச நீதிமன்றத்தால் மத்திய கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் முதன்மை கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளருமான விஜய் சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தனர்.
தேக்கடியில் இருந்து வல்லக்கடவு வனப்பாதை வழியாக வாகனத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்ற கண்காணிப்பு குழுவினருடன், தமிழக அரசின் பிரதிநிதிகளான நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரணியம், கேரள அரசு பிரதிநிதிகளான அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வேணு, நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் கொண்ட கண்காணிப்பு குழுவினரும் சென்று அணையில் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகுகளின் இயக்கம், கேலரி, சுரங்கப் பகுதி மற்றும் கசிவு நீர் செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்த அவர்கள், பின்னர் படகு மூலமாக தேக்கடிக்கு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, குமுளி 1 ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அணையில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து இரு மாநில பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கண்காணிப்பு குழு தலைவர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ஆய்வு தொடர்பாக கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் இன்று நடைபெற்ற ஆய்வுப் பணிகள் நிறைவடைந்தன. முதன் முதலாக முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டு குழுவினருடன் ஆய்வு செய்துள்ளேன். மேலும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
அணையின் அனைத்து பிரச்னைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. பேபி அணையை பலப்படுத்துவது உள்ளிட்ட அணை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும தீர்வு காண இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என முல்லைப் பெரியாறு அணையின் மத்திய கண்காணிப்புக் குழு தலைவர் விஜய் சரண் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu