தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் செலவு ரூ.11 லட்சம் கோடி: எல்.முருகன்
அவினாசியை அடுத்த தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயண நிகழ்ச்சியில் அமைச்சர் முருகன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது மத்திய அரசின் சுகாதாரத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அவர் பார்வையிட்டார். பின்னர், பொதுமக்களுடன் இணைந்து வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் குறித்து எடுத்துரைத்தார். இந்தப் பயணம் அரசின் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் விதமாகவும் இந்தப் பயணம் நடைபெறுவதாக குறிப்பிட்டார். தற்போதைய மத்திய அரசு அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது, இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதாகவும், இதன்மூலம் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார். முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் சிறு, குறு தொழில்கள், பெரிதும் வளர்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கை அடைய பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாக உழைத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த இலக்கை எட்ட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ரயில்வே திட்டங்கள், சாலைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பயனாளிகளுக்கு மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் டாக்டர் எல் முருகன் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu