ஆன்லைன் சூதாட்ட மசோதா: ஆளுநரின் கருத்தை மறுத்த மத்திய அரசு, ஆனந்தத்தில் திமுக
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் அப்போதைய அதிமுக அரசும், தற்போதைய திமுக அரசும் தமிழக சட்டமன்றத்தில் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றின.
இதற்கு ஒப்புதல் பெறும் வகையில் திமுக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்னர் மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லையென ஆளுநர் கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை இந்த கூட்டத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவைற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான கேள்வியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், திறமையின் அடிப்படையிலான விளையாட்டு மற்றும் வாய்ப்பை அடிப்படையாக கொண்ட விளையாட்டு இடையேயான வேறுபாடு குறித்து நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவை மாநில அதிகாரத்தின் கீழ் வருபவை, எனவே இதை தடுப்பது மாநில அதிகார வரம்பின் கீழ் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஆளுநரின் கருத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக திமுகவினர் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu