மத்திய அரசின் வரிப்பகிர்வு: தமிழ்நாட்டுக்கு ரூ.2976.10 கோடி விடுவிப்பு

மத்திய அரசின் வரிப்பகிர்வு: தமிழ்நாட்டுக்கு ரூ.2976.10 கோடி விடுவிப்பு
X

பைல் படம்

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் வரிப்பகிர்வு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

வரிப்பகிர்வின் கூடுதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்த ரூ .72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தவணை 2024, ஜனவரி 10 அன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். 2023, டிசம்பர் 11 அன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்ட ரூ .72,961.21 கோடியை விட இது கூடுதலாகும். தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்- 2952.74 கோடி

அருணாச்சலப் பிரதேசம்- 1281.93 கோடி

அசாம்- 2282.24 கோடி

பீகார்- 7338.44 கோடி

சத்தீஸ்கர்- 2485.79 கோடி

கோவா- 281.63 கோடி

குஜராத்- 2537.59 கோடி

ஹரியானா- 797.47 கோடி

இமாச்சலப் பிரதேசம்- 605.57 கோடி

ஜார்க்கண்ட்- 2412.83 கோடி

கர்நாடக- 2660.88 கோடி

கேரளா- 1404.50 கோடி

மத்தியப் பிரதேசம்- 5727.44 கோடி

மகாராஷ்டிரா-4608.96 கோடி

மணிப்பூர்- 522.41 கோடி

மேகாலயா- 559.61 கோடி

மிசோரம்- 364.80 கோடி

நாகாலாந்து- 415.15 கோடி

ஒடிசா- 3303.69 கோடி

பஞ்சாப்- 1318.40 கோடி

ராஜஸ்தான்- 4396.64 கோடி

சிக்கிம்- 283.10 கோடி

தமிழ்நாடு- 2976.10 கோடி

தெலங்கானா- 1533.64 கோடி

திரிபுரா- 516.56 கோடி

உத்தரப் பிரதேசம்- 13088.51 கோடி

உத்தரகண்ட்- 815.71 கோடி

மேற்கு வங்காளம்- 5488.88 கோடி

மொத்தம்- 72961.21 கோடி

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகளில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டது: மத்திய நிதியமைச்சர்

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் சென்னையில் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று அவர் விளக்கமளித்தார்.

தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 18-ம் தேதி அதி கனமழை பெய்த நிலையில், அன்று மதியமே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாம் நேரில் சந்தித்து கூடுதல் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறினார். அதை ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து விதமான உதவிகளையும் வழங்க உடனடியாக உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 21ம் தேதி வரை தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்த்தாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான உதவிகளைச் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

விமானப்படை மூலமாக 5 ஹெலிகாப்டர்களும், கடற்படை மூலமாக 3 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படை மூலம் ஒரு ஹெலிகாப்டரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவை 70 இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். தேசிய மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின், அமைச்சகங்களுக்கு இடையிலான குழு உடனடியாக அந்த மாவட்டங்களுக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். இதே போல், இந்த மாதத்தில் மிக்ஜாம் புயலின்போது சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின் குழு உடனடியாக சென்னை சென்றதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு தமது பங்கை வழங்குவது வழக்கம் என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பங்கு 900 கோடி ரூபாய், இரண்டு தவணைகளாக ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார். சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்த மையம் தென் மாவட்டங்களில் அதி கனமழை தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதியே முன்னெச்சரிக்கைத் தகவல்களை வழங்கி இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் தகவல்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

தென்மாவட்ட மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். எந்த மாநிலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் இல்லை என்று அவர் விளக்கமளித்தார். உரிய வழிகாட்டு நெறிமுறைகள் படி மாநில அரசுகள் வேண்டுமானால், இதுபோன்ற பாதிப்புகளை மாநில அளவில் பேரிடராக அறிவித்து உரிய முறையில் நிதி ஒதுக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு வழங்கும் நிவாரண உதவித் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அவை பயனாளிகளை முழுமையாகச் சென்றடையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டின் நலன்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், இது தொடரும் என்றும் மத்திய அரசின் பணிகள் தொடரும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

Tags

Next Story