அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்துறை அமைச்சராக தற்போது இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், வழக்கினை துவக்கத்தில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.
அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu