சென்னை பெண் விஞ்ஞானிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.. சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு..

சென்னை பெண் விஞ்ஞானிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.. சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு..
X

சிபிஐ அலுவலகம். (கோப்பு படம்).

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னையை சேர்ந்த பெண் விஞ்ஞானி மற்றும் அவரது கணவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வருபவர் விஜயகுமாரி (வயது 57). இவர், தரமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான 'சமீர்' என்று அழைக்கப்படும் 'சொசைட்டி பார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்தார்.

விஜயகுமாரியின் கணவர் தேவராஜ் (65) திருவண்ணாமலை குடிநீர் வடிகால் வாரியத்தில், நிர்வாக பொறியாளராக பணிபுரிந்தார். தம்பதியர் இருவரும் 2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான பணிபுரிந்த காலத்தில், தங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு, தம்பதியர் மற்றும் விஜயகுமாரியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெருங்குடியில், 'எலெக்ட்ரானிக் சென்டர்' கட்டுமானத்தில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, 'சமீர்' நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கருணாகரன் என்பவருக்கு எதிராக, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், தம்பதியரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்கள், நகைகள் ரொக்கம் ஆகியவற்றை, சி.பி.ஐ., பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 12 ஆவது கூடுதல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்வாலண்டினா முன்பு நடந்து வந்தது. சி.பி.ஐ., தரப்பில் அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி மலர்வாலண்டினா இன்று பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

தம்பதியர் இருவரும் தங்கள் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 89 லட்சத்து 22 ஆயிரத்து 339 ரூபாய், அதாவது 141.90 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். இருவரும் இணைந்தே, அசையும், அசையா சொத்துகளை சேர்த்து உள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல், இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இருவரும் மதிப்புக்குரிய பதவியை வகித்து வந்துள்ளனர். இத்தகைய பதவியை பயன்படுத்தி, சொத்து குவிப்பு குற்றத்தைப் புரிந்து உள்ளனர். எனவே, இருவருக்கு குறைவான தண்டனை என்பதை வழங்க முடியாது.

'வருமான வரிக்கணக்கில் காட்டப்படும் வருமானத்தை வருமான சான்றாகக் கருத முடியாது. அது வரியைக் கணக்கிடும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது' என, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில், உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி இருப்பதாக, வலுவாக அரசு தரப்பு வாதம் எடுத்துரைத்தது.

எனவே, தம்பதியர் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் விஜயகுமாரியின் சகோதரர் விடுவிக்கப்படுகிறார். சட்டத்துக்கு உட்பட்டு, சொத்துகளை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி மலர் வாலண்டினா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!