விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்.. சிபிசிஐடி தகவல்...

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்.. சிபிசிஐடி தகவல்...
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கபட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கபட்டிருந்த, திருப்பூரை சேர்ந்த சபீருல்லா என்ற முதியவரை காணவில்லை என்றும், அவரை மீட்டு தர வேண்டும் என்றும், அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கபட்ட சபீருல்லா, பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கபட்டதாகவும், அங்கிருந்து அவர், தப்பியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெங்களூருவில் உள்ள பத்ராவதி, என்னும் இடத்தில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம், சபீருல்லாவின் அடையாளங்களுடன் ஒத்துபோவதாகவும், அந்த உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சபீருல்லாவின் புகைப்பட ஆதாரங்கள் உள்ளதால், சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டவேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையெடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக சிபிசிஐடி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!