ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ்  கருத்து
X

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி. சிங் ஆன்மா வாழ்த்தும் இல்லையேல் மன்னிக்காது என்றார்

ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாள் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை தமிழக அரசின் சார்பில் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 20 ஆம் நாள் தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட போதே அதை நான் வரவேற்றேன். இப்போதும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமது உருவச் சிலை அமைக்கப்படுவதை உணர முடிந்தால் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதை விட 100 மடங்கு கூடுதல் மகிழ்ச்சியை, தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தால், வி.பி.சிங் ஆன்மா மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

ஒருபுறம் வி.பி. சிங் உருவச்சிலையை திறந்து கொண்டு, இன்னொருபுறம் மாநில அரசின் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று தமிழக அரசு கூறுவது “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகத் தான் அமையும்.

வி.பி. சிங் இன்று உயிருடன் இருந்திருந்தால், பிகாரில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதையும், இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதையும் பாராட்டி இருப்பார். அதேபோல், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்.

வி.பி. சிங் குரலைத் தான் நான் ஒலித்துக் கொண்டிருக்கிறேன். சமூக நீதியின் அடிப்படைகளை தமிழக முதலமைச்சர் இப்போதாவது புரிந்து கொண்டு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு வி.பி.சிங் நினைவு நாளை விட சிறந்த தருணம் இருக்க முடியாது.

எனவே, வி.பி.சிங் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், அதற்காக முதலமைச்சரை வி.பி.சிங்கின் ஆன்மா வாழ்த்தும்; இல்லாவிட்டால், தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெருந் துரோகம் செய்தவர்களை மன்னிக்காது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!