'டெக்னிகலா' பணப்பட்டுவாடா: ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

டெக்னிகலா பணப்பட்டுவாடா: ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?
X
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பண வினியோகம் என பறக்கும்படி கண்ணில் மண்ணை தூவி வேட்பாளர்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்

உள்ளாட்சித்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடியும் நிலையில், கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதோடு பணப்பட்டுவாடா செய்வதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பணப்பட்டுவாடா, பரிசு வினியோகத்தை தடுக்க, பறக்கும் படையினர் போலீசாருடன் தீவிரமாக ரோந்து சுற்றுகின்றனர். அவர்கள், கண்ணில் மண்ணை துாவி, பட்டுவாடாவை கச்சிதமாக செய்து முடிக்கின்றனர். வீட்டில் சென்று பட்டுவாடா செய்யும் போது பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, வாக்காளர்களை, குறிப்பிட்ட இடங்களுக்கு வரவழைத்து, பணப்பட்டுவாடா செய்கின்றனர்.

1,000 முதல் 1,500 வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா செய்ய ஆட்களை நியமிகின்றனர். இவர்களில், ஒரு நபர், பூத் சிலிப், துண்டு பிரசுரம் வழங்குவது போல், வீடுகளுக்கு சென்று, வாக்களிக்கும் நபர்களை உறுதி செய்வார். அப்போதே, பணம் வேண்டுமா அல்லது பரிசு பொருள் வேண்டுமா என கேட்பார்.

வாக்காளர்கள் விருப்பத்தை பொறுத்து, பணம் வேண்டுமென்றால், ஒரு வீட்டில் ஒரு நபரை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தெருவுக்கு போகும்படி கூறுவார். அடையாள குறியீடாக, வாக்காளரிடமே, ரூபாய் நோட்டை வாங்கி, அதில் உள்ள நம்பரை குறித்துக்கொண்டு, அந்த நம்பரை, தெருவில் நிற்கும் மற்றொரு நபரிடம், எத்தனை வாக்குகள் என, மொபைல் போன் வழியாக கூறுவார்.

வாக்காளர், அடையாள குறியீடு ரூபாய் நோட்டை காட்டி உறுதி செய்து, பணத்தை பெற்று கொள்வார். அந்த முகவரிடம், 20 ஓட்டுக்கான பணம் தான் இருக்கும். அவரிடம் பணம் காலியானதும், மற்றொரு நபர், வேறு ஒரு இடத்தில் நிற்பார். அவரிடம் இருந்து, தேவைக்கு ஏற்ப பணத்தை வாங்கி வைத்து கொள்வார்.

இப்படி, ஐந்து பேர் குழுவாக பிரித்து, பட்டுவாடா செய்கின்றனர். இதன் மூலம், பறக்கும் படையிடம் சிக்காமல் பணம் வினியோகம் செய்ய முடியும். அப்படியே சிக்கினாலும், குறைந்த பணம் மட்டுமே இருப்பதால், செலவுக்கான பணம் என கூறி தப்ப முடியும்.

பொருள் கேட்கும் வாக்காளர்களுக்கு, குறிப்பிட்ட கடைக்கு சென்று, இதே போல் ரூபாய் நோட்டில் உள்ள குறியீடு நம்பரை கூறி, விருப்பமான பொருள் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒரு சில வேட்பாளர்கள் இன்னும் ஒரு படி சென்று, வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே மூலமாகவும் அனுப்புவதாக தெரிகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!