ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள், தினக் கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், ஒரு போலீஸ் என இதுவரை 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ரம்மி திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதாகவும், ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்ததாகவும், அதனை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
தற்போது, ஆன்லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு எனவும், அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஏற்கெனவே இரு மணி நேரம் தடை கோரி வாதிடப்பட்டதாகவும், அதை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கோரினார். இதையடுத்து, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu