அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பரிசோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி - கோப்புப்படம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பிறகு அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சிறை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல்சோர்வு, படபடப்பு ஏற்படுவதால் சிறையில் அவ்வப்போது அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அவரது நீதிமன்ற காவலும் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு இருதய பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். நேற்றிரவு 7.20 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இருதயவியல் பிரிவு தலைவர் மருத்துவர் மனோகரன் தலைமையிலான மூத்த மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். எக்கோ உள்ளிட்ட இருதய பரிசோதனைகளும் முழுமையாக இன்று காலையில் எடுக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாக காணப்படுவதால் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் செந்தில் பாலாஜி உடல் அலர்ஜி பிரச்சனை காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புழல் சிறைக்கு திரும்பி இருந்தார். இந்த நிலையில் இப்போது 2-வது முறையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu