தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா
தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12ம் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின. கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
நீர் இருப்பு குறைந்ததாக கூறி தண்ணீர் திறப்பை கடந்த 8ம் தேதி கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. எனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுவதாலும் மழை பற்றாக்குறையாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu