கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது  உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

கருவறையில் உள்ள சாமி படம் வெளியானால் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு

பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், கோவில் நிர்வாகத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கருவறையில் உள்ள சாமி படம் வெளியானால் இனி அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: பழனி கோவிலுக்குள் மொபைல் போன்கள் மற்றும் கேமராக்கள், கேமரா பொருத்திய சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு வருகிற அக்டோபர் 1 முதல் கடுமையான முறையில் அமல்படுத்தப்படும். தற்போது பழனி கோவில் அடிவாரத்தில் ரூ.5 கட்டணத்தில் மொபைல் போன்களை பாதுகாக்கும் மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் கோவில்களில் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி பழனியில் முதற்கட்டமாக விஞ்ச், ரோப் கார் மையங்கள், அடிவார பாத விநாயகர் கோவில் ஆகிய 3 இடங்களில் மொபைல் போன்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தண்ணீர் பந்தல் மண்டபம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அங்கும் ஒரு சேகரிப்பு மையம் அமைக்கப்படும். பழனி மலையில் கோவிலுக்குள் மொபைல் போன்கள் கொண்டு செல்லக்கூடாது என ரயில் நிலையம், பேருந்து நிலையம் , பக்தர்கள் தங்குமிடங்களில் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதையும் மீறி பக்தர்கள் யாரேனும் புகைப்படம் எடுத்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோவிலுக்குள் கேமரா, செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது என்று உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அனைத்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil