தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு அளிக்கப்பட்டது.
பிறகு, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டு அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்பட்டன.
அதே போல், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு
டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை
சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம்
மனோ தங்கராஜ் - பால்வளத்துறை
இந்தநிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் அவரது அப்பாவும் எம்.பியுமான டி.ஆர்.பாலு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu