தமிழகத்தில் 'பிளட் ஆர்ட்' ஓவியம் வரையும் கலாச்சாரத்திற்கு தடை

அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
தமிழகத்தில் ரத்த ஓவியம் எனப்படும் 'பிளட் ஆர்ட்' கலாச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பி.எப். 7 என்ற பெயரில் மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து மேலும் பல நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் உருமாறிய கொரோனா வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது உரு மாறிய கொரோனாவை எதிர்கொள்ள மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உரு மாறிய கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவமனையில் இருக்க வேண்டிய உபகரணங்கள் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பித்ததுடன் மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் உருமாறிய கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளிடம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்த வைரஸ் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சீனாவில் இருந்து வந்த விருதுநகர் மாவட்டம் இலந்தைகூடம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய்- மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததன் அடிப்படையில் அவர்கள் தங்களது சொந்த கிராமத்திலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை முடிவில் தான் அவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும்.இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை.இதுவரை மொத்தம் 593 வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வந்த பின்னர்தான் அவர்கள் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியும்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் 'பிளட் ஆர்ட்' எனப்படும் ரத்த ஓவியம் வரையும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இதன்படி நமது உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து காதலர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதுவது, ஓவியங்கள் வரைவது என ஒரு மோசமான கலாச்சாரம் பரவி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.
ஏனென்றால் ஒருவர் உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு என நிறைய விதிமுறைகள் உள்ளன. ஒரு முறை ரத்தம் எடுத்தால் அதற்கான சிரிஞ்ச் உள்ளிட்ட சாதனங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. அதுவும் ரத்தத்தை மருத்துவர்கள் அல்லது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் தான் எடுக்க வேண்டும் மற்றவர்கள் எடுக்க கூடாது என்றும் விதி உள்ளது. ஆனால் 'பிளட் ஆர்ட்' கலாச்சாரத்தில் அவர்கள் எந்த வகையில் ரத்தத்தை எடுக்கிறார்கள் என தெரியாது. தவறான முறையில் ரத்தம் எடுப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஆதலால் இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu