திருவள்ளுவருக்கு காவி உடை: அண்ணாமலை ட்வீட்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
உழவுக்கு உயிரூட்டும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, சலங்கை, மணிகள் போன்றவை அணிவித்து அலங்கரித்து மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பண்டிகை களை கட்டியிருக்கிறது.
அதேநேரம் ஜனவரி 16 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, காவி நிற உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, கிராம மக்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையாம் மாட்டு பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்." என்று ஒரு பதிவிலும்,
"சிறப்புமிக்க திருவள்ளுவர் தினத்தில் வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்கு தேவையானது, தேவையற்றதை தெளிவாக சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை போற்றுவோம், கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்." என்று மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu