டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் நாளை முதல், டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆரப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவையிலும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செல்வபுரம் மண்டல் சார்பாக தெலுங்குபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சமூக விலகல் மற்றும் முக கவசங்கள் அணிந்தபடி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பபட்டது.
திருப்பூரில்...
திருப்பூரில், வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், வடக்கு மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் கேசிஎம்பி சீனிவாசன், மாவட்ட செயலாளர் கார்த்தி, ராயபுரம் மண்டல தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் பூபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாத், இளைஞரணி மாவட்ட தலைவர் அருண், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில்...
ஈரோடு பெரியார் நகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில்...
நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், உதகை ஏடிசி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் கடையைத் திறக்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் , நகர தலைவர் பிரவீண், நகர செயலாளர் சுரேஷ்குமார், நகர நிர்வாகிகள் உட்பட கட்சியினர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu