சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தான் காரணம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தான் காரணம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
X

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. (பைல் படம்)

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 96 ரன்களும், விரித்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாடும், டெவன் கான்வேயும் கைகோர்த்து நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினர். 26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ராயுடுவும் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!