கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் கோழி பண்ணையாளர்கள் கவலை

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் கோழி பண்ணையாளர்கள் கவலை
X

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சலால், தமிழக கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலையில் உள்ளனர்.

Bird Flu Kerala -பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து, தமிழகத்தில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Bird Flu Kerala -கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் வாத்துப்பண்ணைகளில் வளர்த்து வந்த வாத்துகள் திடீரென இறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். இதில் வாத்துகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவுதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுக்களை நியமித்து, மூன்று 'ஷிப்ட்'டுகளாக பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு மருத்துவ உதவியாளர், 2 ஆய்வாளர் மற்றும் மருந்து அடிப்பவர் என ஒரு குழுவிற்கு 5 பேர் என, தினமும் காலை 10 மணி முதல் 2மணி வரை ஒரு குழுவும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு குழுவும், இரவு 10 மணி முதல் மற்றொரு குழுவும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் மலைவழிப்பாதையில் அமைந்துள்ள செக்போஸ்ட் பகுதியில் மருத்துவக்குழுவினர் தங்கியிருந்து, கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டை, கறிக்கோழி போன்றவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணியானது இரவு பகலாக தொடர்கிறது.

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் மாநில எல்லையோர பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினமும் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் விற்பனைக்காக, கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால், தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என்ற கவலை, நாமக்கல் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பின்பே நாமக்கல்லுக்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கடந்த சில நாட்களாக ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று, பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.13 குறைத்து உள்ளனர். இதனால் கறிக்கோழி விலை, ஒரு கிலோ ரூ.106-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நீடிக்கிறது. இனிவரும் நாட்களில் பறவை காய்ச்சல் தமிழகத்திலும் பரவினால் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலையில் உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!