கேரளாவில் மீண்டும் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லைப்புறங்களில் உஷார்

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தௌிக்கப்படுகிறது.
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதால் தமிழக எல்லைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சில கிராமங்களில் பண்ணையில் வளர்க்கப்படும் வாத்துகள் எச் 5 என்1 என்ற பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா அரசு பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கோவை அருகே உள்ள தமிழக கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கேரளா எல்லைகளான வாளையார் வேலந்தா வளம் மீனாட்சிபுரம் உள்பட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடைத்துறை பராமரிப்பு துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வாகனம் எங்கிருந்து வருகிறது அதில் உள்ள பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் பதிவு செய்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோழி உட்பட பறவைகளின் எரு, முட்டைகள் உட்பட பறவைகள் தொடர்பான பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டு அவை மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
அத்துடன் கோவை மாவட்டத்தில் உள்ள 1252 கோழிப் பண்ணைகளில் பாதிப்புகள் இருக்கிறதா என்பதையும் கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர். பண்ணைகளில் கோழிகள் உயிரிழப்பு ஏற்பட்டால் இது தொடர்பாக கால்நடைத்துறைக்கு உடனடியாக தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோழிப்பண்ணை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நீர்நிலைகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதையும் கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu