மகளிர் உரிமைத்தொகை: பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கிகரிக்கும் வகையில் அனைத்து பெண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில், அந்த அம்சம் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது. தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி இல்லை. விண்ணப்பம் செய்தால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது.
இந்த நிபந்தனை மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற இயலாது.
இதற்காக 8 வகை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குதான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 17ம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu