நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்
முதல்வர் ஸ்டாலின்
12 ஆம் வகுப்பு தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கூறி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் .ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர் .ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார் அந்த குழு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு, புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் , நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.
மசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசுகையில், நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை எனும் முழுமையான சட்ட முன்வடிவை முன்மொழிகிறேன்.
மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வடிவை அறிமுகம் செய்கிறது. மேலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யவும் முன்மொழிவு செய்யப்படுகிறது.
சமூகநீதியை உறுதிசெய்யவும், தேர்வினால் பாதிப்புகளாக மாணவர்களை பாதுகாக்கவும், அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளவும் இந்த சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே அனைத்து கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்வால் அனிதா தொடங்கி ஏராளமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வினால் உயிரிழந்திருக்கிறார்.
எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான இந்த மசோதாவை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu