தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
X

தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார்.

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற ஈராண்டு சாதனை மலர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி குறுந்தகடு ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் பதவியேற்ற நாள் முதல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் பொது மக்களுக்கு நிவாரண பொது உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்தது. வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது.

மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு ஏற்றமிகு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டினை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திட “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தி முதலீடுகளை ஈர்த்து, தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டினை திகழச் செய்திடவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை இளைய தலைமுறையினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற ஈராண்டு சாதனை மலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உதிர்த்தமுத்துகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஆற்றிய உரைகள் (4 தொகுப்புகள்), "Penning Down Change” என்ற காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி குறுந்தகடு ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இவ்வரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலங்களில் மருத்துவம், வேளாண்மை, கல்வி, தொழில், உள்ளாட்சி, சமூகநலம், பொதுப்பணி, என அனைத்து துறைகளிலும் மக்கள் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வருவாய் நிருவாக ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!