சாகாவரம் பெற்ற மகாகவி பாரதி வாழ்க்கை வரலாறு
Bharathiyar history in Tamil -கவிதை எழுதுபவன் கவிஞன், எதிர்காலத்தை சிந்தித்து எழுதுபவர் மகாகவி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கூறியவர் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் இருந்தவர்.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், "சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;" என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான்.
தம் எழுத்துக்கள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய நம் முண்டாசு கவிஞன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறை பற்றி இங்கு காண்போம் வாருங்கள்.
மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக, 1882, டிசம்பர் மாதம் 11ம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.
பாரதியார் இளமை பருவம் 5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதை எழுத தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் . அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.
1897ஆம் ஆண்டு பாரதியாருக்கு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது அவர் வெறும் 14 வயது நிரம்பிய சிறுவனாகவே இருந்தார். பாரதியாரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். சுப்பிரமணிய பாரதி மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு தங்கம்மாள், சகுந்தலா என 2 மகள்கள் பிறந்தனர்.
16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் வாடினார். பிறகு கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை கற்றார் இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.
4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பிய பாரதியார், எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு சுதேசி மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சி போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அந்த சமயம் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது நிவேதிதா, "ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை?" எனப் பாரதியைப் பார்த்து கேட்க. "எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதுமட்டுமல்லாமல் என் மனைவிக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது" என்று பாரதி பதிலளித்தார்.
அதற்கு நிவேதிதா, "உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருவீர்கள்?" எனும் தொனியில் கேள்வி கேட்க, அது பாரதியாரை உலுக்கியது, அதுவரை அவர் கொண்டிருந்த பெண்கள் விடுதலை குறித்த சிந்தனையை முழுதாக மாற்றி அமைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.
பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும் கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கை கொடுத்து வழி நடத்தியது. இதனால் "இந்தியா" பத்திரிகை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. மேலும் பாரதியாருக்கு கைது வாரென்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். 1908 ஆம் ஆண்டு முதல் "இந்தியா" பத்திரிக்கை புதுவையில் இருந்து வெளி வர துவங்கியது.
1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளி ஏறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார் பாரதியார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையத்தில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடையத்திலேயே செலவிட்டார்.
வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் நம் தேசிய கவி. ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையையும் வைத்து பாரதியாரிடம் கொடுக்க, பாரதியோ, தட்டை உம்மிடமே வைத்துக்கொள் என்று கூறி , தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக்கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்துள்ளார் பாரதியார்.
இறைவனிடம் வரம் கேட்கும் போது கூட அவர் தனது நிலையை கைவிட்டதில்லை. விநாயகரிடம் அவர் வரம் கேட்கும் போது, நான் கேட்கிறேன், அதனை அப்படியா ஆகட்டும் என சொன்னால் போதும் என்கிறார்.
ஞான ஆகாசத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பதும் இடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க, என்பேன்! இதை நீ
திருச்செவிகொண்டு திருஉளம் இரங்கி
அங்ஙனமே ஆகுக என்பாய்!
என்று பாடினார்
பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி ஏறிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போதும் அவர் மரணத்துக்கு பயப்படவில்லை.
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் என பாடினார்.
மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி காலமானார். மறைந்தும் மறையாமல் வாழ்வது ஒரு சிலரே. அத்தகைய உயிர்ப்புடன் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாரதியார்.
அவர் கவிதையிலே கூறினால்,
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்
மலிவு கண்டீர் இவ்வுண்மை, பொய் கூறேன் யான்,
மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே.
பாரதியின் விருப்பம் வீண் போகவில்லை. அவரது ஒவ்வொரு பாடலிலும், கட்டுரையிலும் அவரது ஆன்மா உயிர்த் துடிப்புடன் விளங்குவதைக் காண்கிறோம்.
பாரதியின் படைப்புகள்
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு
பாப்பா பாட்டு
சுயசரிதை (பாரதியார்)
தேசிய கீதங்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை
பாரதியார் பகவத் கீதை
பதஞ்சலியோக சூத்திரம்
நவதந்திரக்கதைகள்
ஹிந்து தர்மம்
சின்னஞ்சிறு கிளியே
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திசூடி
ஆறில் ஒரு பங்கு
ஞானப் பாடல்கள்
தோத்திரப் பாடல்கள்
விடுதலைப் பாடல்கள்
பாரதி அறுபத்தாறு
ஆறில் ஒரு பங்கு பொன் வால் நரி
சந்திரிகையின் கதை
ஞானரதம்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu