நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது: பாஜக செயற் குழு கூட்டத்தில் தீர்மானம்
செய்தியாளர்களிடம் பேசும் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்
வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில், பாஜக மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவா் நரேந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இயற்கை விவசாயி மறைந்த நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை இதனை முன் மொழிய நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. வழிமொழிந்தார்.
சிறப்பு தீர்மானத்தில், உழவுத் தொழிலே சிறந்தது என்று கூறியவர் வள்ளுவர். அத்தகைய சிறப்பு மிக்க உழவுத்தொழில், அதன் மேன்மையை இழப்பது கண்டு பொங்கி எழுந்து நம் மண்ணைக் காத்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். இந்தியா முழுக்க இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர். நாட்டு மரங்கள், நாட்டு மாடுகள், நாட்டு விதைகள் மீது நாட்டம் மிக்க நாட்டுப்பற்றாளர். தனி மனிதராக, இயற்கை விவசாயத்திற்காக போராடிய இரும்பு மனிதர். தன்னலம் இன்றி தனி ஒரு மனிதராக இயற்கையை மீட்கப் போராடியதற்காகவும் தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம்மாழ்வாருக்கு பாரதத்தின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டம் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு அவற்றுக்கு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கதக்கது. மேலும் மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறுவதும் ஏமாற்றும் வேலையாகும்.
தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்துள்ளனர். இது தமிழுக்கு பெருத்த அவமானம். தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக இல்லை.
தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, அபின், மதுவகைகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu