விரைவில் பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் சேவை
பெங்களுரு மெட்ரோ - கோப்புப்படம்
பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் ஓசூருக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நகரங்கள் மட்டுமின்றி, இரண்டு மாநிலங்களும் தான் பலன்பெறப் போகின்றன.
ஓசூரில் சிப்காட், இலகுரக மற்றும் கனரக வாகன தயாரிப்பு என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை காணப்படுகின்றன.
ஓசூரில் 2,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வரும் 2024 ஜனவரி சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஈர்க்கப்படும் முதலீடுகள் ஓசூர் நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் தமிழகத்தின் "ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்" என்ற கனவிற்கு ஓசூரின் பங்களிப்பு அளப்பறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஓசூரில் இருந்து பெங்களூருவிற்கு மெட்ரோ ரயில் சேவை என்பது நிச்சயம் தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும்.
தற்போது பெங்களூரு நகரில் ”நம்ம மெட்ரோ” என்ற பெயரில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மெட்ரோ ரயில் தடத்தை ஓசூர் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது, பொம்மசந்திரா ஸ்டேஷனில் இருந்து ஓசூர் நகரம் வரை மெட்ரோ இணைப்பு செல்லும். மொத்தம் 20.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.
இதில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகா மாநில எல்லையிலும், 8.8 கிலோமீட்டர் தூரம் தமிழக எல்லையிலும் வருகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சென்னை மெட்ரோ (CMRL), பெங்களூரு மெட்ரோ (BMRCL) ஆகியவை சம அளவிலான பங்களிப்பை செலுத்த வேண்டும். அந்தந்த மாநிலங்களில் இடம்பெறும் வழித்தடப் பணிகளை சம்பந்தப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவனங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். மெட்ரோ ரயில் சேவை என்றாலே மத்திய அரசின் பங்களிப்பும் உண்டு.
அந்த வகையில் பெங்களூரு டூ ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கர்நாடகா அரசு சமீபத்தில் தான் ஒப்புதல் தெரிவித்தது. ஓசூர் டூ பொம்மசந்திரா வரை இருமாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதில் என்ன தவறு? என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மறுபுறம் இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியது .
இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஓசூரில் இரு மாநில மக்களும் வசித்து வருகின்றனர். வேலை விஷயமாக இரு மாநிலங்களுக்கும் இடையில் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு உதவிகரமாக இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கும்.
தற்போது சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு 50 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யும். எனவே பெங்களூரு டூ ஒசூர் மெட்ரோ இணைப்பு திட்டம் நிச்சயம் பெரும்வரவேற்பை பெறும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu