வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்று தொடங்குகிறது
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று வியாழக்கிழமை தொடங்கி 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சென்னை வட்ட பொதுச்செயலாளர் ஜி.கிருபாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில், 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நடப்பு நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக, கூடுதல் தொழிலாளர் ஆணையர், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நிதித்துறை பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது. அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று கூறினார்
மேலும், ஆன்லைன் சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும், ஏ.டி.எம்.களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, திட்டமிட்டப்படி 2 நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் 90 ஆயிரம் ஊழியர்களும், நாடு தழுவிய அளவில் 10 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இதனால், தமிழகத்தில் 6 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுவதால் ரூ.500 கோடி மதிப்பில் 2 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்படும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu