சிறப்பு பூஜைகள், அன்னதானத்திற்கு தடை: பொய்ச்செய்திக்கு தமிழக அரசு மறுப்பு
பைல் படம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 2021-ல் பொறுப்பேற்றது முதல் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சுமார் 400 ஆண்டுகளுக்குப்பின், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உட்பட திருக்கோயில்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளன. இந்து 1,270 சமய அறநிலையத்துறையின் மூலம் 764 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்று பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்திடும் வகையில் 2022-23-ஆம் நிதியாண்டில் 113 திருக்கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய வழிபாட்டு உணர்வுகளில் ஊறியுள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த உண்மை புரியும். மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் கூட இதனை மறுக்க முடியாது.
இந்நிலையில் திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu