புதுச்சேரியில் சித்த மருத்துவம் தொடர்பான ஆவ்சம் கண்காட்சி

புதுச்சேரியில் சித்த மருத்துவம் தொடர்பான ஆவ்சம் கண்காட்சி
X

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஆவ்சம் 2023 கண்காட்சியை திறந்துவைத்த டாக்டர் ஆர் ஸ்ரீதரன்.

புதுச்சேரியில் சித்த மருத்துவம் தொடர்பான ஆவ்சம் கண்காட்சி நடைபெற்றது.

மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையமும், புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையும் இணைந்து கோரிமேட்டில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அத்துறையின் இயக்குநர் டாக்டர் ஆர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னோட்ட நிகழ்வாக, (Ancient Wisdom Encapsulated Siddha Concepts Mega Expo) ஆவ்சம் 2023 கண்காட்சியை திறந்துவைத்து டாக்டர் ஆர் ஸ்ரீதரன் உரையாற்றினார்.

புதுச்சேரி பகுதிகளில் மருத்துவ மூலிகைகளை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் விவசாயிகளுக்கு மூலிகைகளை சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஸ்ரீதரன் கூறினார். ஏனாம் பிராந்தியத்தில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயுஷ் அமைச்சகம் விரைவில் வயோமித்ரா, ஆயுர்வித்யா, ஆயுர்கிராம் போன்ற திட்டங்களை தொடங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் கென்னடி பாபு தலைமை வகித்தார். மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தின் அலுவலர் டாக்டர் இ ஆனந்தகிருஷ்ணன், மத்திய மக்கள் தொடர்பகத்தின் துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார், மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் உதவி இயக்குநர் டாக்டர் ஜி மாசிலாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநர் டாக்டர் பி சத்யராஜேஷ்வரன் வரவேற்புரை ஆற்ற, ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் காயத்ரி குணாளன் நன்றி கூறினார்.

இந்தக் கண்காட்சியில் சிறுதானிய உணவுகள், மூலிகை சார்ந்த அழகு சாதனப் பொருட்கள், பல் பராமரிப்புப் பொருட்கள், சித்த புற மருத்துவம், மூலிகைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்கள் டாக்டர் ரத்னமாலா, டாக்டர் லாவண்யா, டாக்டர் சண்முகராம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!