பனை மரம் ஏற சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு விருது
பைல் படம்.
மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2021-22 ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 76 இலட்சம் பனை விதைகளும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம், பனைப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதற்கான நவீன இயந்திரங்கள் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை. பனை மரங்களில் ஆராய்ச்சி என பல்வேறு பணிகளுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது.
நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 10 இலட்சம் பனை விதைகளை விநியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த இயந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளார்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், இப்பயிற்சியினைப் பெற்ற விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உபகரணங்கள் விநியோகிப்பதற்கும் பனையோலைப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். இத்தகைய கருவியினைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார்.
இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். பனை மரத்தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் பனைமரம் ஏறுவதற்கு எளிதான கருவி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, நமது மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu