இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ.தூரம் கையில் சுமந்து சென்ற அவலம்

இறந்த குழந்தையின் சடலத்தை 10 கி.மீ.தூரம் கையில் சுமந்து சென்ற அவலம்
X

இறந்த குழந்தை சடலத்தை கையில் சுமந்து செல்லும் பெண்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே குழந்தையின் சடலத்தை பாதிவழியிலே ஆம்புலன்ஸ் இறக்கி விட்டதால் 10 கி.மீ. தூரம் பெற்றோர் கையில் சுமந்து சென்றனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி விஜி- பிரியா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தையான தனுஷ்கா நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது இரவு நேரம் என்பதால் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நல்லப் பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.

அங்கு படுத்து உறங்கி கொண்டு இருந்த குழந்தையை பாம்பு கடித்து உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர் அவளை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர். உடனடியாக மருத்துவம் பார்க்க மலை கிராமத்தில் வசதி இல்லாததால் அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துள்ளது. மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து பிரேதபரிசோதனை முடிந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் குழந்தையின் உடலை பாதி வழியிலேயே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் குழந்தையின் சடலத்தை எடுத்து சென்றனர்.

மேலும் அதற்கு மேல் செல்ல சரியான பாதை இல்லாததால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அந்தக் குழந்தை இறந்து உள்ளது.

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில் சரியான சாலை வசதியும் மருத்துவமனையும் இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றனர். மேலும், அந்தப் பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்படுவதாகும் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture