சட்டசபை மோதல் விவகாரம்: அன்றுஅதிமுகவுக்கு சென்னாரெட்டி...இன்று திமுகவுக்குஆளுநர் ஆர்.என். ரவி

சட்டசபை மோதல் விவகாரம்:    அன்றுஅதிமுகவுக்கு சென்னாரெட்டி...இன்று திமுகவுக்குஆளுநர் ஆர்.என். ரவி
X

ஜெயலலிதா -சென்னாரெட்டி

சட்டசபை மோதல் விவகாரத்தில் அன்று சென்னாரெட்டி காலத்திலும் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி காலத்திலும் என்ன நடந்துள்ளது என்பதை அறிய தொடர்ந்து படிச்சு பாருங்களேன்....

தமிழக அரசியலில் தற்போது 'ஹாட் ஸ்பீச்' ஆக இருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு தான். ஆளுநருக்கும், முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மோதல் தொடங்கிவிட்டது என்று தான் கூறவேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி

மோதலுக்கு காரணம்

கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழா கொடியேற்றும் நிகழ்வில் முதல்வரும், ஆளுநரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாதது, ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்தது, நீட் தேர்வுக்கு ரத்து கோரிய சட்டமன்ற தீர்மான மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதற்காக தி.மு.க .அரசு அனுப்பிய அவசர சட்டமசோதாவை ஜனாதிபதிக்கு இன்று வரை அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்து வருவது, தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி என ஆளுநர் ரவி பேசியது என இப்படி தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சலசலப்பு இல்லாத அரசியலா?

இந்த சூழலில் தான் கடந்த 9-1-2023 அன்று தமிழக சட்டமன்றத்தில் இதுவரை இலை மறை காயாக இருந்து வந்த மோதல் போக்கு பூதாகரமாக வெடித்து சிதறி உள்ளது. இந்த மோதல் விவகாரம் தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா? ஆளுநர் ஆர்.என்.ரவி. தி.மு.க. அரசு கொடுத்த ஆளுநர் உரை அறிக்ககையில் குறிப்பிட்ட சில பகுதிகளை படிக்காமல் இருந்தது மட்டும் இன்றி தான் சுயமாக சில கருத்துக்களையும் சேர்த்து படித்தது ஏன்? இதன் பின்னணி என்ன? ஆளுநரின் பின்புலத்தில் மத்திய பா.ஜ.க. செய்யும் அரசியல் இருக்கிறதா? இப்படி அடுக்கடுக்காக எத்தனை கேள்விகள் கேட்டாலும் அதற்கு இப்போது அளிக்க கூடிய ஒரே விடை அலைகள் இல்லாத கடலும், பிரச்னைகள் இல்லாத மனிதனும், சலசலப்பு இல்லாத அரசியலும் உண்டா? என்ற கேள்விகள் பொருந்திய பதிலை தான் நம்மால் அளிக்க இயலும்.

ஆளுநர் என்பவர் யார்?

பொதுவாக முதல்வர் என்பவர் மக்களின் பிரதிநிதி. ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்று பதவியில் இருப்பவர். ஆனால் ஆளுநர் அப்படி அல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி. எனவே அவர் மத்திய அரசிற்கு விசுவாசமாகத்தான் இருப்பார். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் முதல்வருக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ அதற்கு நிகராக தான் அரசியல் சட்டத்தின்படி மாநில ஆளுநருக்கும் சில அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்களின் எல்லையை மீறாத வரை ஆளுநர் மாநில அரசிற்கு நல்லவராக தான் இருப்பார். அவர் எல்லை மீறும் போது தான் பிரச்னை முற்றுகிறது.

மத்திய அரசிற்கு வேவு

நமது நாடு சுதந்திரம் பெற்று என்ன தான் 75வது ஆண்டு அமுத பொன் விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருந்தாலும் நூற்றாண்டிற்கும் மேலாக நம்மை அடிமைகளாக நடத்தி இறுதியாக சுதந்திரம் வழங்கி இருந்தாலும், அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் சட்ட அமைப்புகளை தான் நாம் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் அமைக்கப்பட்டது தான் ஆளுநர் எனப்படும் கவர்னர் பதவியும். நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டு போய்விட்டாலும், அவர்கள் உருவாக்கிய கவர்னர் பதவியானது ஒவ்வொரு மாநில அரசையும் வேவு பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அன்று ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த, நடக்கும், நடைபெற உள்ள சம்பவங்களை கவர்னர்கள் மூலம் தெரிந்து கொண்டு நம்மை அடக்கி ஆண்டார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இன்று அவர்கள் உருவாக்கிய அந்த சட்ட அமைப்பு மத்திய ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது. அந்த வகையில் ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக தான் இருப்பார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்- ஆளுநர் ஆரீப் முகமது கான்.

அண்டை மாநிலங்களின் நிலை

மக்களாட்சி நடைபெறும் இந்த கால கட்டத்தில் கவர்னர் பதவியால் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். பல மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் இடையே பிரச்னை தான் இருந்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அங்கு கவர்னராக உள்ள ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்தில் இருக்கிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

அதே போல் இன்னொரு அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும். அங்கு முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவ், மாநில கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை எந்த விழாவிற்கும் அழைப்பதே இல்லை என்ற நிலைப்பாடு தான் உள்ளது. அதனால் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணா சொன்னார் 'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவை இல்லை' என்று. அவர் என்றோ பல ஆண்டுகளுக்கு முன் சொன்னது தற்போது தீர்க்க தரிசனம் போல் ஆளுநர் ரவி உருவில் அரங்கேறி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மறுக்க முடியாத உண்மை

சரி இனி பிரச்னைக்கு வருவோம்... தமிழக சட்டமன்றத்தில் அன்று அதாவது ஜனவரி 9ம் தேதி நடந்த சம்பவம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு நிகழ்வு என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த நிகழ்வின் மூலம் தமிழக சட்டமன்றத்தின் மரபை ஆளுநர் மீறி விட்டார் என பேரவை தலைவரான அப்பாவுவும், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் சபை மரபை மீறிய ஆளுநர் ரவி இனி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. அவரை உடனே வெளியேற்றவேண்டும் என கூவி வருவதோடு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆளுநருக்கு எதிரான போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்..

முதல்வர் போட்ட வாய்ப்பூட்டு

முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு பற்றியோ ஆளுநர் பற்றியோ யாரும் பேசக்கூடாது, விமர்சனம் செய்யக்கூடாது, போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டக்கூடாது என வாய்ப்பூட்டு போட்டு இருப்பதால் தி.மு.க. தரப்பில் புயலுக்கு முந்தைய அமைதி போன்ற ஒரு சூழல் நிலவி வருகிறது.

நெட்டிசன்கள் கலாய்ப்பு

சமூக வலைத்தளங்களில் சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்தே 'கெட் அவுட் ரவி' என்ற ஹேஸ்டேக் வைரல் ஆக பரவி வருகிறது. அது மட்டும் அல்ல ஆளுநர் ரவிக்கு எதிராக எவ்வளவு பதிவுகள் வருகிறதோ அதற்கு நிகராக ஆதரவான பதிவுகளும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் இந்த பதிவுகள் நம்மை சிரிக்கவும் வைக்கிறது. சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கிறது.

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி.

ஷோபனா ரவியா?

'எழுதி கொடுத்ததை படிப்பதற்கு அவர் என்ன ஷோபனா ரவியா? ஆளுநர் ஆர்.என். ரவிடா'. இப்படியும் ஒரு நெட்டிசன் கலாய்த்து உள்ளார். இன்று சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் பலருக்கும் இந்த ஷோபனா ரவியை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று புற்றீசல் போல் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் முளைத்து அவை வாசிக்கும் செய்திகள் நமது காதைக் கிழிய வைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனியார் தொலைக்காட்சிகள் உருவாவதற்கு முன்பாக அதாவது கால் நூற்றாண்டிற்கு முன்பு வரை 'தூர்தர்ஷன்' மட்டுமே ஒரே டி.வி. செய்தி சேனல். அன்றைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் செய்தி வாசித்தவர் தான் இந்த ஷோபனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் குழு எழுதி கொடுப்பதைத் தான் அவர் அப்படியே படிப்பார் என்றாலும் அவரது உச்சரிப்பும் உடல்மொழியும் பலரையும் ரசிகர்களாக மாற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மரபை மீறியது யார்?

கடந்த 9-1-2023அன்று தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வில் பேரவை மரபை மீறியது முதல்வரா? அல்லது ஆளுநரா? என்பது சட்ட ஆய்விற்கு உட்பட்டது. அதற்குள் நாம் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் ஆளுநர் ரவி சபையின் உரிமை மீறி நடந்து கொண்டதாக உரிமை மீறல் பிரச்னையை எழுப்பி சபாநாயகரிடம் மனு அளித்து இருக்கிறார் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. உரிமை மீறல் தொடர்பான அலுவல் ஆய்வு குழு இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். ஆளுநர் என்னதான் மாநிலம் முழுவதற்குமான அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் சட்டமன்றத்திற்குள் அவரது அதிகாரம் என்பது வானளாவ அதிகாரம் படைத்த பேரவை தலைவரான சபாநாயகர் எடுக்கும் முடிவிற்கு அடங்கித் தான் போக வேண்டும்.

மற்ற மாநிலங்களில்...

சரி தமிழகத்தில் நடந்தது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் வேறு எந்த மாநிலங்களிலாவது நடந்து உள்ளதா? என்ற கேள்வி இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் பலருக்கு எழலாம். அந்த கேள்விக்கு பதில் தமிழகத்திற்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் நடந்து உள்ளது.

அது என்ன? யார் ஆட்சி காலத்தில் அப்படி நடந்தது என்பதை இனி பார்ப்போமா?

கேரளா

கேரளாவில் கடந்த 2021ம் ஆண்டு ஏ.கே. அந்தோனி கேரள முதல்வராக இருந்த போது அங்கு ஆளுநராக இருந்தவர் சுக்தேவ் சிங். அப்போது மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் சுக்தேவ் சிங் படிக்காமல் தனக்கு அளிக்கப்பட்டிருந்த உரையில் சில மாற்றங்களை செய்து படித்து உள்ளார். இது அந்த கால கட்டத்தில் புயலைக் கிளப்பியது. ஆனால் அங்கு சபாநாயகராக இருந்த வைக்கம் புருஷோத்தமன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அரசால் அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரை தான் அதிகாரப்பூர்வமான உரை என்று ஒரு தீர்ப்பினை வழங்கி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேற்கு வங்காளம்

இங்கு மட்டும் அல்ல. மேற்கு வங்காள மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து உள்ளது. மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் கடந்த 1969 ம்ஆண்டு அஜாய் குமார் முகர்ஜி முதல்வராக இருந்தார். அப்போது அங்கு ஆளுநராக இருந்த தர்ம வீரா தனக்கு மாநில அரசு அளித்த உரையில் இருந்து சில பகுதிகளை தவிர்த்து விட்டு படித்த போது முதல்வர் அஜாய் குமார் முகர்ஜி குறுக்கிட்டு ஆளுநர் அரசின் முழு உரையையும் படிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி.

கண்டன தீர்மானம்

ஆக இந்த இரண்டு மாநிலங்களில் நடந்துள்ள நிகழ்வுகள் தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை போலவே நடந்திருந்தாலும், கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் . ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை முன்மொழிந்து படித்தது போல் படிக்கவும் இல்லை, தமிழக ஆளுநர் ரவியை போல் அந்த ஆளுனர்கள் பாதியில் எழுந்து வெளிநடப்பு செய்வது போல் வெளியேறவும் இல்லை.

சட்ட ஆய்வு

எனவே தான் தமிழக நிகழ்வு அகில இந்தியாவிற்குமே ஒரு புதிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே இதில் பேரவை மரபை மீறியது யார் என்பது நிச்சயம் சட்ட ஆய்விற்கு உட்பட்டது தான். இந்த ஆய்வினை நாடாளுமன்ற மரபுப் படி மத்திய அரசும் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். இல்லை நீதிமன்றங்கள் கூட இந்த பிரச்னையை சூமோட்டாவாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தலாம்.

சரி... இனி தமிழகத்தில் ஏற்கனவே இருந்த கவர்னர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே ஏதாவது பிரச்னை நடந்ததா? என்பதை சற்று பின்னோக்கி பார்ப்போமா?

ஜெயலலிதாவுடன் மோதிய சென்னாரெட்டி

அது ...மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல் முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவி வகித்த கால கட்டம். இந்த கால கட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சென்னாரெட்டி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் அம்மாநிலத்தின் முதல்வர், மத்திய அமைச்சர் என பல பதவிகளை வகித்த பழுத்த அரசியல்வாதி.

ஜெ. எழுதிய கடிதம்

அவரது கால கட்டத்தில் தான் தமிழகத்தில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்தது. 1993ம் ஆண்டு சென்னை எழும்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பயங்கரமான குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்துவதற்காக அப்போது கவர்னராக இருந்த சென்னாரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று கள ஆய்வு செய்தார். அது பேரிடர் போன்ற சம்பவமாக இருந்தும் கூட கவர்னர் அங்கு வந்து ஆய்வு செய்ததை ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபற்றி உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

குற்றச்சாட்டு

அது மட்டும் அல்ல. கடந்த 1995ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது விழாவில் பங்கேற்ற ஆளுநர் சென்னாரெட்டி மாவட்ட அரசு அதிகாரிகளை அழைத்து நிர்வாகம் தொடர்பான சில விவரங்களை கேட்டார். இந்த சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக சென்னாரெட்டி மாநில அரசு விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம்சாட்டி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

தேநீர் விருந்து புறக்கணிப்பு

இதன் தொடர்ச்சியாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழாக்களில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்துகளை புறக்கணித்தார். தான் புறக்கணித்தது மட்டும் இன்றி தமிழக அரசின் தலைமை செயலாளர் உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கூட அங்கு செல்ல விடாமல் அடக்கி வைத்திருந்தார். அவர் பதவியில் இருக்கும் வரை இந்த நிலையே தொடர்ந்தது.

பாலியல் குற்றச்சாட்டு

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற ஒரு பகீர் குற்றச்சாட்டையும் வைத்தார். இந்த குற்றச்சாட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆளுநர் கிண்டி மாளிகையை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு முடக்கப்பட்டார். அவருக்கு எதிராக அ.தி.மு.க. வினர் பல போராட்டங்களை நடத்தினார்கள்.

அன்றைய தினகரன் நாளிதழில் வெளியாகி இருந்த தலைப்பு செய்தி.

உயிர் தப்பிய சென்னாரெட்டி

ஒரு கட்டத்தில் திண்டிவனம் அருகே ஆளுநர் சென்னாரெட்டி சென்று கொண்டிருந்த போது (11-4-1995) அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆளுநருக்கு எதிராக பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆளுநர் சென்னாரெட்டி எந்த வித காயமும் இன்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினார் என்றாலும் அவரது மெய்க்காப்பாளருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. அப்போது இந்த செய்தி நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளியாகி இருந்தன. இது தமிழகத்தின் கடந்த கால வரலாறு என்பது மட்டும் அல்ல. ஜெயலலிதாவிற்கும், சென்னாரெட்டிக்கும் அரசியல் ரீதியான ஏழாம் பொருத்தமாகவே அரசியல் நோக்கர்களால் அப்போது பார்க்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த ஆளுநர்கள் எல்லாம் பெரும்பாலும் அரசியல் செய்யாமல் மாநில அரசுடன் அனுசரணையாக இருந்து விட்டே சென்றிருக்கிறார்கள்.

பன்வாரிலால் புரோகித்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் மாநில அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கமே நடத்தினார் என்று சொல்லும் அளவிற்கு நடந்து கொண்டார் என்றே சொல்வேண்டும். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு, மக்கள் குறை கேட்பது என அவரது செல்பாடுகள கொஞ்சம் ஓவராக தான் இருந்தன.

பன்வாரிலால் புரோகித்.

நல்ல பிள்ளை ஆளுநர்

அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வோ அவரது கட்சியினரோ அதனை கண்டிக்கவில்லை. ஆளுநரின் நடவடிக்கைககளுக்கு ஒத்துழைப்பே நல்கி வந்தனர். மாறாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வினர் தான் மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதாக அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆளும் கட்சி ஒத்துழைப்பு கொடுத்ததால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசின் உரையை அப்படியே படித்து நல்ல பிள்ளை ஆளுநர் என பெயரெடுத்து சென்று விட்டார்.

முதல்வர்களின் திறமை

இப்படி இவை எல்லாம் தமிழகத்தில் கடந்த காலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே இருந்த அரசியல் ரீதியான முட்டல், மோதல், உரசல் போக்குகளாகும். ஆனால் அந்த கால கட்டங்களில் கூட சட்டமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு முதல்வர்களும் திறமையாக பார்த்துக்கொண்டனர். ஆளுநர்களும் நடந்து கொண்டனர். முதல் முறையாக இப்போது தான் இது போன்ற ஒரு மரபு மீறல் மோதல் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story